சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, இந்த வைரஸ் தொற்று காரணமாக கேரளாவில் மூன்று மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் வுஹான் மாகாணத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் படித்துவந்தவர்கள்.
இதையடுத்து, மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், இதுகுறித்து மூத்த சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மாணவரும் தற்போது நலமடைந்துள்ளார்.
அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு மருத்துவ பரிசோதனைகளிலும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் அவர்கள் அடுத்த 10 நாள்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்" என்றார்.
முன்னதாக, அழப்புலாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மற்றொரு மாணவி பிப்ரவரி 13ஆம் தேதி குணமடைந்தார். மேலும், கேரளாவில் 2,210 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 16 பேர் மருத்துவமனையிலும் மற்றவர்கள் வீட்டிலேயே கண்காணிப்பில் உள்ளனர் என்றும் கேரள சுகாதார துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'முடிந்தால் ஆட்சியை கவிழ்த்துப் பாருங்கள்' - பாஜகவுக்கு சிவசேனா சவால்