மத்திய அரசு ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தைப் பறித்து, இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றி 6 மாதங்களுக்குப் பிறகு, அங்கு நிலவும் சூழலைப் பார்வையிட 25 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் வருகைத் தந்துள்ளனர்.
அவர்கள் ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், இத்தாலி, போலந்து, நியூசிலாந்து, மெக்ஸிகோ, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரியா, உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் நேற்று பாரமுல்லாவுக்குச் செல்ல வேண்டிய நிலையில், அங்கு மோசமான காலநிலை நிலவியதால், அவர்களால் அங்கு செல்ல முடியவில்லை என்று அதிகாரிகள் ஈடிவி பாரத்திடம் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ''ஸ்ரீநகரில் போல்வர்ட் சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டுத் தூதர்கள் பார்வையாளர்களாகத் தங்கியுள்ளனர்.
மோசமான கால நிலை காரணமாக, அவர்களின் சுற்றுப்பயண அட்டவணை மாற்றப்பட்டதால், நேற்று ஸ்ரீநகர் தால் ஏரியைப் படகில் சென்று சுற்றிப் பார்த்தனர். நேற்று உள்ளுர் பத்திரிகையாளர்கள் சிலரைச் சந்தித்துப் பேசினர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, மூன்றாவது முறையாக வெளிநாட்டுப் பார்வையாளர்கள் அங்கு சென்றுள்ளனர். கடந்த ஜனவரி 9-ஆம் தேதி இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர், கென்னத் ஜஸ்டர் உள்ளிட்ட வெளிநாட்டுப் பார்வையாளர்கள் ஜம்மு காஷ்மீரின் நிலைமையை ஆராய அங்கு சென்றனர்.
அந்த சமயத்தில் ஐரோப்பிய யூனியன் தூதர்கள் செல்வதைத் தவிர்த்து விட்டனர். கடந்த அக்டோபர் மாதத்தில் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த எம்.பிக்கள் தனிப்பட்ட பயணமாக காஷ்மீருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.
காஷ்மீர் தீர்மானம்:
வரும் ஜூன் மாதத்தில்தான் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளை காஷ்மீருக்கு அழைத்துச் செல்ல, மோடி அரசு முடிவு செய்திருந்தது. கடந்த வாரத்தில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில், காஷ்மீர் குறித்த விவாதம் எழுந்தது.
காஷ்மீர் மற்றும் குடியுரிமைச் சட்டம் குறித்து ஐரோப்பிய யூனியனில் கூட்டுத் தீர்மானம் நிறைவேற்றப் போவதாக சொல்லப்பட்டது. எனினும், ஜனவரி 29ஆம் தேதி காஷ்மீர் குறித்த தீர்மானத்துக்கான வாக்கெடுப்பை ஒத்தி வைப்பதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்தது.
இந்தியாவின் ராஜதந்திர ரீதியான முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்பட்டது. மார்ச் மாதத்தில் நடைபெறும் அடுத்த ஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில், காஷ்மீர் தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடைபெறும் என்று நம்பப்படுகிறது.
தலைவர்கள் விடுவிப்பு:
காஷ்மீரில் தால் ஏரிக்கரையில் அமைந்துள்ள உல்லாச விடுதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டுத் தலைவர்களை, பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் காலித் ஜகாங்ஹீர் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் ஈடிவி பாரத்திடம் தொலைபேசி வாயிலாக கூறுகையில், '' வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் குறித்து வெளிநாட்டுப் பார்வையாளர்களுடன் விவாதித்தேன்.
காஷ்மீர் மக்கள் அன்பை நேசிக்கும் மக்கள். யூனியன் பிரதேசமாக காஷ்மீர் மாற்றப்பட்டது குறித்து பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மீண்டும் காஷ்மீரின் அமைதியை கெடுக்கும் செயல்கள் அரங்கேறுவதை மக்கள் விரும்பவில்லை. மெகபூபா முக்தி, உமர் அப்துல்லா போன்றத் தலைவர்களை இந்தியா விரைவில் விடுவிக்கும் என்று அவர்களிடத்தில் நான் சொன்னேன். ஊழல் மற்றும் பிற வழக்குகளில் அவர்களுக்குத் தொடர்பிருந்தால் விசாரிக்க வேண்டும்'' என்றார்.
மூன்று இளைர்கள் கைது:
இதற்கிடையே , காஷ்மீர் இளம் சக்தி அமைப்பைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டுப் பார்வையாளர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அருகே போராட்டம் நடத்தியதால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ''யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக முதலீடு செய்யுமாறும் வெளிநாட்டுப் பார்வையாளர்களை வரவழைத்து பண விரயம் செய்ய வேண்டாம்'' என்றும் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கோஷமிட்டனர்.
டொனியன் குடியரசு தூதர் பிராங்க் ஹேன்ஸ், தால் ஏரியை படகில் சுற்றிப் பார்த்த பிறகு, ''சுற்றுலாவை விரும்புபவர்களுக்கு காஷ்மீர் ஒரு அழகானப் பிரதேசம் ''என்று குறிப்பிட்டார்.
பள்ளிகள் மூடல்:
ஆப்கானிஸ்தான் தூதர் தாகிர் குத்ரி, ''நான் எப்போதும் காஷ்மீருக்கு வர விரும்புவேன். பிற நாடுகளைப் போல பள்ளிகள், கடைகள் திறந்துள்ளன. இது நல்ல விஷயம்'' என்றார். ஆனால், குளிர் காலம் என்பதால் அனைத்து காஷ்மீர் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
காஷ்மீருக்கு இம்முறை ஆப்கானிஸ்தான், ஆஸ்திரியா, பல்கேரியா, கனடா, செக் குடியரசு, டென்மார்க், டொமினியன் குடியரசு, பிரான்ஸ், ஜெர்மனி, கினியா, ஹங்கேரி, இத்தாலி, கென்யா, கிர்கிஸ்தான், மெக்ஸிகோ, நமிபியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, போலந்து, ரவாண்டா, ஸ்லோவேகியா, தஜிகிஸ்தான், உகாண்டா , உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் வந்துள்ளனர்.
இதையும் படிங்க:அரசுப்பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்திய சூர்யா