புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று, கல்வி மற்றும் மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ கரோனா பரவலால் மூடப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும், அடுத்த மாதம் ஜனவரி 4 ஆம் தேதி முதல் திறக்கப்படும். ஒன்று முதல் 12 வரை அனைத்து வகுப்புகளுக்கும் இது பொருந்தும். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கும் இந்த வகுப்புகள், பின்னர் ஜனவரி 18 ஆம் தேதி முதல் வழக்கமான நேரத்தில் முழுநேரமாக இயங்கும். கல்லூரிகளில் நாளை முதல் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு, ஆராய்ச்சி துறை மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
கடந்தாண்டு பயிர் உற்பத்தி திட்டத்தின் கீழ் நெற்பயிருக்கு, அறுவடைக்கு பிந்தைய பொருளீட்டு மானியமாக ஏக்கருக்கு ரூ.2,000 வீதம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது விவசாயிகளின் நலன் கருதி உற்பத்தி செலவினை ஈடு செய்வதற்காக ரூ.5,000 ஆக உயர்த்தி, அதிக பட்சமாக ஒரு விவசாயிக்கு இரு பருவங்களுக்கு ஏக்கருக்கு 10,000 என்ற அளவில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.12.50 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நடப்பாண்டு செலுத்தப்பட்டுள்ளது.