கரோனா பெருந்தொற்று உலகையே உலுக்கிய நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், எட்டு மாத காலத்திற்கு பிறகு கர்நாடக மாநிலத்தில் 10 மற்றும் பி.யூ.சி வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி தெளிக்கப்படுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உடல் வெப்பநிலை கண்டறியும் உபகரணமும் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.
குளிர், காய்ச்சல், இருமல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் பள்ளிகளில் மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வருகைப் பதிவும் கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கல்வி நிலையங்களில் தகுந்த இடைவெளியைக் கடைபிடிப்பது எப்படி என்பது குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எஸ். சுரேஷ் கூறுகையில், "ஆசிரியர்களுக்கு ஏற்கனவே ஆர்டி - பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 55 வயதுக்கு மேலான ஆசிரியர்கள் பேஸ் ஷீல்டு அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு மூன்று முதல் நான்கு வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும்" என்றார்.
10 மற்றும் பி.யூ.சி வகுப்புகளுக்கு மார்ச் மாதம் தேர்வுகள் நடத்தப்படாது என்பதையும் அவர் உறுதி செய்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், ரங்கோலி கோலமிட்டு மாணவர்களைப் பள்ளி நிர்வாகம் வரவேற்றுள்ளது. பெங்களூருல் மட்டும் 32 உயர்நிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. அதில், 2190 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.