மத்திய அரசால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா, பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டமாக வடிவம் பெற்றது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலை அடைந்து 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடிபெயர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின், பார்சி, புத்த மதத்தினர் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும்படியான விதிமுறைகள் இதில் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி நாடு முழுவதிலும் தற்போது வரை போராட்டம் நடைபெற்றுவருகிறது. அதிலும் குறிப்பாக டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்றன.
மேலும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்திலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் திமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.