டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16ஆம் தேதி 23 வயது பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். இந்தக் குற்ற வழக்கில் ஒருவர் பதின்ம வயதுடையவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிச் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மீதமுள்ள ஐந்து பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் ஒருவர் சிறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நால்வருக்கும் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனைக்கு எதிராகத் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு தண்டனையை உறுதி செய்தது.
தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் 2017ஆம் ஆண்டு உச்சப்பட்ச தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து குற்றவாளிகள் நான்கு பேரும், குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பினர். இந்த மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தார்.