2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் நான்கு பேருக்கும் 2020 பிப்ரவரி 1ஆம் தேதி தண்டனையை நிறைவேற்றிட வேண்டும் என டெல்லி அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. குற்றவாளிகள் தரப்பிலிருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களும், கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் குற்றவாளிகள் அடுத்தடுத்து புதிய மனுக்களை தாக்கல் செய்து தண்டனையை நிறைவேற்ற விடாமல் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவனான பவன் குமார் குப்தா சிறார் சட்டப்பிரிவுகளின் கீழ் தனக்கு தண்டனை வழங்க கூடாது என கூறி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2012-ஆம் ஆண்டு காவல்துறை தன்னை கைது செய்தபோது தான் சிறுவனாக இருந்ததாகவும், அதை நீதிமன்றம் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் தனக்கு சிறார் சட்டப்பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.