தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல - உச்ச நீதிமன்றம்

டெல்லி: மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

By

Published : Jun 11, 2020, 1:44 PM IST

இளங்கலை, முதுகலை மருத்துவப் படிப்புகளில் அரசு கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு, திமுக, அதிமுக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

நீதிபதி நாகேஸ்வர ராவ் இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல; மனுதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி இட ஒதுக்கீட்டை உறுதி செய்துகொள்ளலாம் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் நலனில் கவனம் செலுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் பாராட்டுத் தெரிவிப்பதாக விசாரணையின்போது நீதிமன்றம் தெரிவித்தது. இது குறித்து நீதிபதி மேலும் கூறுகையில், "நீட் விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இது தமிழ்நாட்டில் வழக்கத்திற்கு மாறானது" என்றார்.

திமுக சார்பாக ஆஜரான வழக்குரைஞர் வில்சன், "தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டம் அடிப்படை உரிமையை உறுதிசெய்கிறது. ஆனால், தற்போது அது அமல்படுத்தப்படவில்லை.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளைப் பின்பற்ற கோரிக்கைவிடுக்கிறோம். இட ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடவில்லை. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை. இது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 32-க்கு எதிரானது" என வாதாடினார்.

இதற்குப் பதிலளித்த நீதிமன்றம், "யாருடைய அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டால்தான் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 32 செல்லுபடியாகும். அனைவரும் தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் கவனம் செலுத்துவதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல" எனத் தெரிவித்தது.

இதற்கு வில்சன், "பாதிக்கப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தை நாட முடியாது. எனவே, அரசியல் கட்சிகள்தான் அவர்களைப் பிரிதிநிதித்துவப்படுத்த வேண்டும்.

உரிமைக்காகத் தொடுக்கப்பட்ட அரசியல் போரின் விளைவாக 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைத்தது. தற்போதுள்ள இட ஒதுக்கீட்டை மறுத்தால் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் பலர் பாதிக்கப்படுவர்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு 40 டிஎம்சி தண்ணீர் - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details