உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் பகுதியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி உயிரிழந்தார். இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் நீதியை மறுக்கும் விதமாகவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பாதுகாக்கும் விதமாகவும் அம்மாவட்ட காவல்துறையினர் செயல்பட்டதாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக, யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தது. இவ்வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று (அக்.28) இரு முக்கிய உத்தரவை தெரிவித்தது. அதன்படி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெறும் எனவும், பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினருக்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை பலப்படுத்தியுள்ளது. நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடக்க வேண்டும் என ஆரம்பத்திலிருந்தே கோரிக்கை வைக்கப்பட்டிருந்ததாக, பிரியங்கா காந்தி அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க:கரோனாவால் பாதிக்கப்பட்ட உச்ச வயதுவரம்பை எட்டும் தேர்வர்கள் : கூடுதல் வாய்ப்பு வழங்க மத்திய அரசு பரிசீலனை