டெல்லி: 1984 சீக்கிய கலவர வழக்கில் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கபெற்றவர் சஜ்ஜன் குமார். காங்கிரஸ் முன்னாள் தலைவரான இவர், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி பிணைக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த பிணை மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையின் போது சஜ்ஜன் குமாருக்கு ஆதரவாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் விகாஷ் சிங், “குமார் 20 மாதங்களாக தொடர்ந்து சிறையில் உள்ளார். இதனால் கிட்டத்தட்ட அவர் 16 கிலோ குறைந்துவிட்டார். அவரது உடல்நிலை வேறு மோசமாக உள்ளது. ஆகையால் அவருக்கு பிணை வழங்க வேண்டும்” என்று வாதாடினார்.
இதற்கு எதிர்தரப்பு வழக்குரைஞர் ஹெச்.எஸ். போல்கா எதிர்ப்பு தெரிவித்தார். குமார் நலமுடன் உள்ளார் என்று கூறிய அவர் அவருக்கு தேவைப்பட்டால் முன்பு சிகிச்சை எடுத்துக்கொண்ட மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.