கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு திண்டாடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, வேறு மாநிலங்களுக்கு சென்று பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை இன்னும் மோசமாகியுள்ளாது. பெரும்பாலான மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உணவு, தங்குமிடம் ஆகியவை குறித்த வழிகாட்டுதலை நீதிமன்றம் வகுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு நீதிபதி எஸ்.கே. கவுல் அமர்வுக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இதுகுறித்த விசாரணையில் அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, ''மக்கள் யாரேனும் உணவின்றி தவித்துவந்தால் அவர்களுக்கான அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அழைத்த ஒரு மணி நேரத்தில் உணவு வழங்கப்படுகிறது'' என்றார்.