தமிழ்நாட்டின் மிக முக்கிய சுற்றுலா தங்களில் ஒன்று நீலகிரி. ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில், நீலகிரியில் யானையின் வழித்தடங்களில் ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனால் யானைகள் வழிதவறி அருகிலிருக்கும் கிரமங்களில் நுழைவதாகவும் ரயில்களில் மோதி உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்வதாகவும் குற்றச்சாடுகள் எழுந்தன.
இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் யானையின் வழிதடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை உடனடியாக இடிக்க வேண்டும் என்று கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான உத்தரவையும் அப்போதைய தமிழ்நாடு அரசு பிறப்பித்திருந்து.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் நீலகிரியுள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதில் ஹோட்டல்களை திறக்க உரிய அனுமதி பெற்றுள்ள போதிலும் தங்கள் ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நீலகிரியில் யானையின் வழிதடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், சட்டவிரோத கட்டடங்களை கண்டறியவும் அது குறித்த வழக்குகளை விசாரிக்கவும் மூன்று பேர் கொண்ட குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
இதையும் படிங்க: விடுதலையான மெகபூபா முப்தி: வரவேற்ற ஃபரூக் அப்துல்லா