பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த இந்த வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே முன் இன்று வந்தது. திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அதேபோல், 11 எம்.ஏல்.க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார்.
இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான திமுக தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், "11 அதிமுக எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கு அளிக்கப்பட்ட கடித்தத்துக்கு அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. அதன்மீது அவர் முடிவு எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்று வாதிட்டார்.
மேலும், இது தொடர்பாக சபாநாயகரிடம் 20.3.2017இல் மனு அளிக்கப்பட்டது என்ற கபில் சிபல், பல நேரங்களில் அரசுக்கு எதிராக அளிக்கப்படும் மனுக்களை சபாநாயகர் உடனே பரிசீலனை செய்வதில்லை என்றும் ஆனால், மனு எதிர்க்கட்சிகளுக்கு எதிரானது என்றால் மறுநாளே அதன்மீது நடவடிக்கை எடுக்கின்றனர் என்றும் கூறினார்.
"அட்டவணை 10இன்படி சபாநாயகர் என்பவர், உடனே மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி அளிக்கப்படும் தீர்மானங்கள், கோரிக்கைகள் மீது மூன்று மாதங்களுக்கு மேலாக கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் அதிகமான காலம். இது தொடர்பாக மணிப்பூர் மாநில சபாநாயகருக்கு நீதியரசர் நாரிமன் அண்மையில் வழங்கிய உத்தரவினை கவனத்தில் கொள்ளவேண்டும்," என்று கபில் சிபல் வாதிட்டார்.