பல்கர் கும்பல் வன்முறை வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு - பல்கர் கும்பல் வன்முறை வழக்கு
12:31 June 11
டெல்லி: பல்கர் கும்பல் வன்முறை தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் கடலோர மாவட்டமான பல்கரில் கடந்த 16ஆம் தேதி காரில் சென்றுகொண்டிருந்த இரண்டு மதகுருக்கள் உள்பட மூன்று நபர்களை, குழந்தை கடத்தல்காரர்கள் என்று நினைத்து அப்பகுதி மக்கள் அடித்துக் கொலை செய்தனர். இந்தக் படுகொலை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் 110 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் அசோக் பூஷண், எம். ஆர். ஷா, வி. ராமசுப்பிரமணியன் கொண்ட அமர்வு இந்த வழக்கின் விசாரணையை இன்று எடுத்துக் கொண்டது. மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு, மாநில காவல்துறை தலைவர், சிபிஐ அலுவலர்கள் இதுகுறித்து பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
பல்கர் கும்பல் வன்முறை தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கு ஒன்று கடந்த இரண்டு மாதங்களாக மும்பை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவும் ஆனால் மனுதாரர் அவசர வழக்காக இதனை கருதி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் மகாராஷ்டிரா அரசு வாதம் முன்வைத்தது. கும்பல் வன்முறை தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு குறித்த அறிக்கையை காவல்துறை சமர்பிக்க உத்தரவு பிறப்பித்திருந்தது.