மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் வழக்குகளை தொடுத்திருந்தனர்.
ஜூலை 27ஆம் தேதியன்று நடைபெற்ற அந்த வழக்குகளில் இறுதிக்கட்ட விசாரணையை அடுத்து நீதிமன்றம்" அடுத்த ஆண்டு முதல் இதை நடைமுறைப்படுத்தும் வகையில், 3 மாதத்திற்குள் மத்தியஅரசு முடிவு செய்ய வேண்டும்" என தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, நடப்பு 2020-2021 கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என அதிமுக சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதி மன்றம், மனுமீது, மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் பாலாஜி சீனிவாசன் கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி தாக்கல் செய்திருந்த மனுவில், "ஓ.பி.சி இட ஒதுக்கீட்டு தொடர்பான சிக்கல்களை களைந்து, இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய ஒரு குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்" என கோரப்பட்டிருந்தது.
இதன் மனு மீதான விசாரணை இன்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வந்தது.
தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், " தமிழ்நாட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவதால், இந்த கல்வியாண்டில் 50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென்ற அதிமுகவின் மனு தொடர்பாக மத்திய அரசு உடனடியாக தனது பதிலை அறிக்கையாக அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் தான் அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.