விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள எல்ஜி பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து கசிந்த விஷ வாயு தாக்கி, 11 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடிய எரிவாயு கசிவு சம்பவம் தொடர்பாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ.50 கோடி இடைக்கால இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அந்நிறுவனம் மேல்முறையீடு செய்ய முடிவுசெய்தது.
சீல் வைக்கப்பட்ட எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்திற்குள் பணியாளர்கள் நுழைய அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், நிறுவன வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கக்கூடிய 30 பணியாளர்களின் பட்டியலையும் வழங்குமாறு நிறுவனத்திடம் கோரியது. தேவையான ஆவணங்களைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியதையடுத்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அசல் பதிவுகளை சமர்ப்பிப்பதில் கால அவகாசம் அளித்தது.