கரோனா வைரசைக் (தீநுண்மி) கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு தற்போது ஐந்தாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருப்பினும், நாட்டில் பெரும்பாலான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். பலரும் தங்களது வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர்.
இதனைக் கருத்தில்கொண்டு ரிசர்வ் வங்கி வங்கிகளில் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்த ஆறு மாத காலம் அவகாசம் வழங்கியது. ஆயினும் இந்தச் சலுகைக் காலத்தில் கடன்களுக்கான வட்டி வசூலிக்கப்படும் என அறிவித்திருந்தது.
சலுகைக் காலத்தில் வட்டியைத் தள்ளுபடி செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, வங்கிகள் வட்டித் தொகையைத் தள்ளுபடி செய்தால் உள்நாட்டு மொத்தவருவாயில் ஒரு விழுக்காடு அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வங்கிகள், மாதத் தவணை செலுத்துவோரிடம் வட்டி வசூலிக்கலாமா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பின்னர், இந்த ஆறு மாத சலுகைக் காலத்தில் கடன் தவணைகள் மீது வட்டிகள் விதிக்கப்படுமா அல்லது வட்டிகள் முழுவதும் தள்ளுபடி செய்ய பரிசீலிக்கப்படுமா என்பது குறித்து இந்த வார இறுதிக்குள் மத்திய நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் இணைந்து ஆலோசித்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கை வரும் புதன்கிழமைக்கு (ஜூன் 17) ஒத்திவைத்தது.