மகாராஷ்டிராவில் அரசியலமைப்பு பின்பற்றப்படவில்லை எனக் கூறி மாநில அரசை கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் மனுவில், "சுஷாந்த் சிங் மரணம், நடிகை கங்கனா ரனாவத்துக்கு விடுக்கப்பட்ட மிரட்டல், முன்னாள் கடற்படை அலுவலர் மதன் லால் சர்மா தாக்கப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களை மேற்கோள்காட்டி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதை தெரிவிக்கவிரும்புகிறேன்.
எனவே, மகாராஷ்டிரா அரசை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவினை இன்று (அக்.16) விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரை அணுக உங்களுக்கு சுதந்திரம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.