ராணுவ வீரர்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் ராணுவ ரீதியான வழக்குகளை விசாரிக்கும் நோக்கில் ஆயுதப்படை தீர்ப்பாயம் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆயுதப்படை தீர்ப்பாய சட்டம், 2007இன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இத்தீர்ப்பாயம் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவருகிறது.
இதனிடையே, தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 22, 23 ஆகஸ்ட் 31 ஆகிய தேதிகளில் நிறைவடையுள்ள நிலையில், புதிய உறுப்பினர்கள் நியமிப்பது குறித்து விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, தற்போதுள்ள உறுப்பினர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும், ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் புதிய உறுப்பினர்களை ஒரு மாதத்திற்குள் நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், அனைத்து நியமனங்களுக்கும் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு, ஓய்வுபெறும் அலுவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் மாங்குலிக் தெரிவித்தார். புதிய உறுப்பினர்களை நியமிப்பது சிக்கலான செயல்முறையைக் கொண்டது என்றும், அதில் சில பிரச்னைகள் இருப்பதாகவும் அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் 4ஜி சேவை: மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் மறுப்பு!