தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விமான முன்பதிவு கட்டணத்தை திருப்பி அளிக்கக் கோரிய மனு - விசாரணை ஒத்திவைப்பு! - விமானப் போக்குவரத்து இயக்குநரகம்

டெல்லி : கரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பாக முன்பதிவாகி ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளின் முழு கட்டணத்தைத் திரும்ப அளிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

விமான முன்பதிவு கட்டணத்தை திருப்பி அளிக்கக் கோரிய மனு - விசாரணை ஒத்திவைப்பு!
விமான முன்பதிவு கட்டணத்தை திருப்பி அளிக்கக் கோரிய மனு - விசாரணை ஒத்திவைப்பு!

By

Published : Sep 24, 2020, 4:31 AM IST

கோவிட்-19 பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.

பின்னர், ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகளைத் தொடர்ந்து மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டன.

ஊரடங்கு குறித்து அறியாததால் மார்ச் 25ஆம் தேதிக்கு முன்பாக விமான டிக்கெட்களை முன்பதிவு செய்த பலருக்கும் அதற்குரிய கட்டணம் திரும்ப வழங்கப்படவில்லை.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக இந்திய விமானப் பயணிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷன், எஸ்.கே.கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது மார்ச் 25ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரையிலான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கு டிக்கெட்களை முன்பதிவு செய்திருந்த அனைவருக்கும் அந்தத் தொகை திரும்பித் தரப்படும் என விமானப் போக்குவரத்து இயக்குநரகமும், விமானப் போக்குவரத்து அமைச்சகமும் உறுதி அளித்திருந்தன.

இந்நிலையில், நேற்று (செப்.23) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது டிஜிசிஏ சார்பில் ஆஜரான வழக்குரைஞர், பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான சில சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதற்காக கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

அதில், "விமான நிறுவனங்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட உள்நாட்டு விமானங்களுக்காக அனைத்து டிக்கெட்டுகளும் நேரடியாக திரும்பித் தரப்படும். சர்வதேச பயணத்தைப் பொறுத்தவரையில், இந்தியாவில் இருந்து புறப்படும் விமானங்களுக்கான டிக்கெட்டுகளை உள்நாட்டு கேரியர்கள் அல்லது வெளிநாட்டிலிருந்து முன்பதிவு செய்த பயணிகளும் பணத்தைத் திரும்பப் பெறலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த அதன் பயணிகளுக்கு முழுத் தொகையையும் திருப்பிக் கொடுத்துள்ளதாக இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தன.

இந்நிலையில், வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

ABOUT THE AUTHOR

...view details