மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடி வந்த ஜே.என்.யூ. மாணவர் சர்ஜில் இமாம், போராட்டத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக டெல்லி, உத்தரப் பிரதேசம், மணிப்பூர், அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனித்தனியாக அவர் மீது குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து விசாரிக்கும் படி உச்ச நீதிமன்றத்தில் சர்ஜில் இமாம் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் அசோக் பூஷன் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு கடந்த முறை வந்தபோது, "இந்த மனு மீது டெல்லி, அஸ்ஸாம் உள்ளிட்ட ஐந்து மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணை இன்று (ஆகஸ்ட் 14) நடைபெற்றது. சர்ஜில் இமாம் சார்பாக ஆஜராகிய சித்தார டேவ், ''சர்ஜில் இமாமின் இரண்டு உரைகளை வைத்து டெல்லி, உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளன. சமீபத்தில் செய்தி தொலைக்காட்சி ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஒரே இடத்திற்கு மாற்றப்பட்டது போல இந்த வழக்கையும் ஒரே மனுவாக மாற்றி விசாரிக்க வேண்டும்" என வாதாடினார்.