கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தலைநகர் டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாகத் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், இந்தப் போராட்டத்தால் சாலைப் போக்குவரத்து பாதிப்பதாகவும், அதனை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், போராட்டக்கார்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மூத்த வழக்கறிஞர்கள் சன்ஜெய் ஹெட்ஜ், சன்தான ராமசந்திரன், முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் வாஜாஹட் ஹபிபுல்லா ஆகியோரை கடந்த வாரம் மத்தியஸ்தர்களாக நியமித்தது.
நீதிமன்ற உத்தரவின்படி, மத்தியஸ்தர்கள் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களைச் சந்தித்து அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், அதுகுறித்து அறிக்கையும் தயார் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சன்ஜெய் கிஷான் கவுல், கெ.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியஸ்தர்கள் தாங்கள் தயார் செய்த அறிக்கையை நீதிபதிகள் முன் சமர்ப்பித்தனர்.
அதனைப் பெற்றுக்கொண்ட நீதிபதிகள், "ஓய்வில்லாமல் போராட்டங்கள் நடத்த வீதிகள் ஒன்றும் போராட்டக்களங்கள் அல்ல. மத்தியஸ்தர்கள் சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வு செய்வோம்" என்றனர். இதையடுத்து, இந்த வழக்கை மார்ச் 23ஆம் தேதி ஒத்துவைக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.