ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவைப் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, அவரது தங்கையும் ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டின் மனைவியுமான சாரா அப்துல்லா பைலட் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தொடுத்திருந்தார்.
அம்மனுவில், “அரசியலமைப்பின் சிறப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டத்தை ஜனநாயக வெளிகளில் எதிர்ப்போரை மெளனிக்க வைக்கும் தந்திரமாக அரசியல் தலைவர்கள் உட்பட தனிநபர்களை தடுத்து வைக்க குற்றவியல் நடைமுறை குறியீட்டின் கீழ் அலுவலர்கள் தமது அதிகாரங்களை பயன்படுத்துகின்றனர்.
இந்த அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான நோக்கம் அவரை (ஒமர் அப்துல்லாவை) மட்டுமல்ல, தேசிய மாநாட்டு கட்சியின் முழு தலைமையையும், அதேபோல் ஜம்மு-காஷ்மீருக்காக சேவை செய்த ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் தலைமையையும் சிறையில் அடைப்பதே ஆகும். பல ஆண்டுகளாக இந்திய ஒன்றியத்தோடு துணையாக நின்றவர்களை, ஏன் இந்த அரசு பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து வைத்திருக்கிறது ? என்ற கேள்விக்கு இதுவரை எந்தவித நியாயமான காரணமும் அவர்களால் சொல்ல முடியவில்லை.
தடுப்புக்காவல் உத்தரவுக்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல், ஆறு மாதங்கள் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனவே பிப்ரவரி 5ஆம் தேதி உத்தரவின்படி, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவை தடுத்து வைத்திருப்பதை ரத்து செய்ய வேண்டும். உடனடியாக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என அதில் கோரப்பட்டுள்ளது.