ஆம்.. இப்போது இல்லாவிட்டால் எப்போதும் இல்லை! நாளை எனும் எதிர்காலத்தின் மீது கவிந்திருக்கும் இருள் மேகங்களை அகற்றுவதற்கான நேரம், இது!!
வசந்தகாலம் என்பது நினைவுகளின் ஓட்டத்தில் மறைந்துகொண்டிருக்கிறது. அடுத்த பத்தாண்டானது (Decade) , நம்பிக்கையையும் வாய்ப்பையும் அதிகரித்துள்ளது. எல்லையில்லா நம்பிக்கையைக் கொண்ட இந்த உலகம், நவீனமான புதிய உலகத்துக்குள் செல்வதற்கான பாதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் செயல்பாடானது, அந்தப் புது உலகிற்குச் செல்வதற்காக, கடந்துபோன ஆண்டுகளில் செய்த பிழைகளை எதிர்கொள்ளும் சவால்களைத் தூக்கிவீசுகிறது.
நாளைய காலத்தை மூடியிருக்கும் இருண்ட திரைச்சீலைகளான அந்த சவால்கள் என்னென்ன? அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகள் என்னென்ன? அமைதியான ஒரு புதிய பத்தாண்டுகளை ஏற்படுத்துவதற்கு மனிதர்கள் தன்னளவில் எப்படி தயாராகவேண்டும்? 2020-30 காலகட்டத்தில் நாம் எதிர்கொள்ளவேண்டிய சவால்களைப் பற்றிய சிறப்புச் செய்திக்கட்டுரை...
சந்தேகமே இல்லை, நாம் வெப்பமான இடத்தின் மீது அமர்ந்துகொண்டிருக்கிறோம்; நெருப்பு நம்மை எரித்துக்கொண்டிருப்பதைப் பற்றி உணராமல், இது வெறும் சூடு என்பதாக நமக்கு நாமே சொல்லிக்கொள்கிறோம். அடுத்த பத்தாண்டுகளில் பருவநிலை மாற்றம் பற்றி உணரவைக்க எந்த அளவுக்கு நமக்கு திறம் இருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளை பாதிக்கக்கூடிய இயற்கைப் பேரழிவுகளை எப்படி கட்டுப்படுத்துவது, பசுமையை எப்படிப் பாதுகாப்பது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.
இப்போதைக்கு அப்படியான பேரழிவு ஏதும் நேரப்போவதில்லை; அதனால் நமக்கு பாதிப்பு ஏதும் இல்லை; பாதுகாப்பாக இருக்கிறோம் எனும் கருத்து நிலவுகிறது. கெடுவாய்ப்பாக, அது உண்மை இல்லை. நாம் மறுப்பு தெரிவிக்கும் மனநிலையில் இருந்தாலும், ஒட்டுமொத்த குழப்படி - பாதக விளைவுளின் நடுவில் நாம் மாட்டிக்கொள்ளப்போவது விரைவில் நடந்தேறும் என்பதை உணரவேண்டிய தேவை உள்ளது.
அண்மையில், சிறிதும் எதிர்பார்க்கப்படாத பெருமழையால் சென்னை நகரமே வெள்ளக்காடு ஆனது; வெள்ளம் வடிந்த சில மாதத்திலேயே ஒரு பொட்டுத் தண்ணீர்கூட இல்லாதபடி ஒட்டுமொத்த நகரமே தண்ணீர்த் தட்டுப்பாட்டால் தவித்துப்போனது. இதைப்போலவே, மும்பை நகரமும் பொருத்தமற்ற காலப் பெருமழையால் நீரில் மிதந்தது; அதேவேளை, சுற்றிலும் உள்ள விவசாயிகள் விவசாயத்துக்கு மழையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இப்படி தொடர்ச்சியான மழைப்பொழிவானது, தேக்கமாகி தடங்கலாக மாறவும், வடிகால்கள், கொசுக்களைப் போன்ற பல்வேறு பூச்சிகளின் பெருக்கத்துக்கான வாய்ப்பிடமாக மாறவும் காரணமாகிறது. இவை எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம் பருவநிலை தப்புதல்தான் என்பதை நம்பமுடிகிறதா?
சந்தையில் வெங்காய விலைக்கும் பருவநிலை தப்புதலுக்கும் இடையிலான தொடர்பு நேர்விகிதத்தில் இருக்கிறது என்பதைப் பற்றி எப்போதேனும் நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா? முன்னரே கணிக்கமுடியாதபடி பெய்யும் மழை, பயிர் இழப்புகள் ஆகியவை பருவநிலை தப்புதலின் விளைவே என்பதை சுற்றுச்சூழலியலாளர்கள் அறிவிக்கவே செய்கின்றனர். இப்படித்தான் வெங்காய சாகுபடியும் குறைகிறது. விளைவாக, வெங்காய உற்பத்தியில் பற்றாக்குறையாகி, சந்தையில் வெங்காயத்தின் விலையானது சாமானிய மக்களால் வாங்க முடியாதபடி ஏற்றம் கண்டுள்ளது.
அலறச்செய்யும் அடுத்த பத்தாண்டு!
புவி வெப்பமயமாதல் : புவிக்கோளத்தின் மேற்பரப்பு வெப்பநிலையானது ஏற்கெனவே சராசரியிலிருந்து ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இன்னும் ஒரு டிகிரி செல்சியஸ், அதாவது மொத்தமாக 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயருமானால், பனிமலையும் இமயமலையும் உருகத்தொடங்கி, கடலோரப்பகுதிகள் மூழ்கும் பேரபாயம் ஏற்படும். இவ்வாறான பெரிய பேரழிவுகளுக்கு காரணம் என்ன, புவி வெப்பமயமாதல்தான்! ஆகையால், புவிவெப்பநிலையானது 1.5 டிகிரி அளவைவிட அதிகரிக்காதபடி உடனடிச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கரிம உமிழ்வுகள்:
நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் பேரளவிலான பயன்பாடு, வாயு மண்டலத்தில் கரிம உமிழ்வுகளின் அடர்த்தியை 300 பி.பி.எம்.(P.P.M.) முதல் 400 பிபிஎம் அதிகரித்திருக்கிறது. புவிவெப்பமயமாதலுக்குக் காரணமான இந்த உமிழ்வுகளைக் கட்டுப்படுத்துவது இந்த பதிற்றாண்டின் சவாலாகும். கரிம உமிழ்வுகளைத் தடுப்பதும் ஏற்கெனவே சுற்றுச்சூழலில் சேகரமாகியிருக்கிற உமிழ்வுகளை அழிப்பதும் நடப்புப் பிரச்னை ஆகும். அது கடலில் கலந்து கரைவதற்கு இன்னும் 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அதிவிரைவான பருவநிலை தப்புதலைக் கையாள்வதற்கான தீர்வுகளைக் கண்டறிவது, இந்த பதிற்றாண்டின் மிகப்பெரும் சவால்களில் ஒன்று.
எப்படி சாதிக்கப்போகிறோம்?
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, உலக நாடுகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகள் பருவநிலை தப்புதலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றன. 1992ஆம் ஆண்டு ரியோ-டி-ஜெனிரோ மாநாடு முதல் 2016ஆம் ஆண்டு பிரான்சில் மேற்கொள்ளப்பட்ட பாரிஸ் உடன்படிக்கைவரை பலவற்றைச் சொல்லமுடியும். அரசுகள் மட்டுமே இதில் முழுப்பொறுப்பு கொண்ட தரப்பு என்பது கூடாது; தனி நபர் அளவில் நாம் அனைவருமே பருவநிலை குறித்த புரிந்துகொள்ளலில் முக்கிய வினை புரிந்தாகவேண்டும்.
மரங்களை வெட்டாதீர்கள்; வளர்க்கப் பாருங்கள்!