ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்து சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், இதனை மத்திய அரசு மறுத்துவந்தது. பல பத்திரிகைகள் அங்கு மனித உரிமைகள் மீறப்படுவதாக செய்திகள் வெளியிட்டுவந்தன.
முக்கியமாக, சிறார்களைக் காவல் துறையினர் கைது செய்துவைத்துள்ளதாகச் சமூக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், குழந்தைகள் உரிமை அமைப்பைச் சேர்ந்த இனாக்சி கங்குலி, சாந்தா ஆகியோர் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். குழந்தைகள் சட்டவிரோதமாகக் கைது செய்வது குறித்த அறிக்கையை ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றம் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், ஒன்பது வயது சிறுவன் உள்பட 144 சிறார்களைக் காவல் துறையினர் சட்டவிரோதமாகக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இருவரை தவிர மற்ற அனைவரும் அன்றே விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நான்கு நீதிபதிகள் அம்மாநிலத்தின் அனைத்து சிறைகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயாரித்தனர்.