இந்தியாவில் நடைபெற்ற ஊழல் விவகாரங்களில் சாரதா நிதி மோசடி விவகாரம் நாட்டு மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. கிட்டதட்ட ரூ.2500 கோடிக்கும் அதிகமாக ஊழல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அந்த ஊழலால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றது. இதில் பல முக்கிய புள்ளிகள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த நிதி மோசடி வழக்கினை கொல்கத்தா காவல் துறை ஆணையர் ராஜீவ் குமார் விசாரித்து வந்தார். இருப்பினும் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
அப்போது சிபிஐ அலுவலர்களுக்கு ராஜீவ் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் சிபிஐ அலுவலர்கள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ராஜீவ் குமாரை கைது செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐக்கு இடைக்கால தடைவிதித்தது.
இந்நிலையில் காவல் துறை ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்வதற்கான தடையை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளதையடுத்து, சிபிஐ அலுவலர்கள் ராஜீவ் குமாரை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர் வீட்டில் இல்லாததால் தொடர்ந்து கைது செய்ய முனைப்பு காட்டிவருகின்றனர்.