மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பேசிய நடிகை கங்கணா ரனாவத் மும்பை பாதுகாப்பற்ற நகரமாக மாறிவருகிறது. இது ஒரு சிறய பாகிஸ்தான் போலவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல மும்பை உள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக நேற்று (செப் 6) செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், “ நடிகை கங்கணா சுஷாந்த் சிங் மரண விவகாரத்தில் மும்பையை சிறு பாகிஸ்தான் என விமர்சித்துள்ளார். இதற்கு அவர் பகிரங்கமாக மும்பை மற்றும் மகாராஷ்டிரா மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும்.
அவருக்கு துணிவிருந்தால், மும்பையைக் கூறியது போல் அகமதாபாத்தை கூற முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.
சஞ்சய் ராவத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த குஜராத் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் பாரத் பண்டியா, “ சிவசேனா முக்கிய தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் ராவத், குஜராத், மற்றும் அகமதாபாத் மக்கள் குறித்து தவறான வார்த்தைகளை உபயோகித்து அவதூறு பரப்பியுள்ளார்.
இதற்காக அவர் குஜராத் மற்றும் அகமதாபாத் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். சிவசேனா கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் குஜராத் குறித்து அவதூறு பரப்புவதை நிறுத்தவேண்டும்.
வெறுப்பு பொறாமை தீமை ஆகியவற்றிலிருந்து அவர்கள் விலக வேண்டும். இந்த குஜராத் காந்தியையும் பட்டேலையும் நாட்டிற்கு வழங்கியுள்ளது.
சர்தார் வல்லபாய் பட்டேல் 562 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து இந்தியா என்ற நாட்டை உருவாக்க பெரும் பங்காற்றியுள்ளார். பாகிஸ்தானுடன் இணையவிருந்த உனாகத் மற்றும் ஹைதராபாத்தை அவரது பெரும் துணிவு மற்றும் திறமையினால் இந்தியாவுடன் இணைத்துள்ளார்.
370 வது பிரிவை ரத்து செய்வதன் மூலம் காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்ற வேண்டும் என்ற படேலின் கனவு குஜராத்தை சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே, கடந்த காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி அனைத்து நிலைகளிலும் குஜராத் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு வலு சேர்க்க உறுதியுடன் செயல்பட்டு வருகிறது” என்றார்.