முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழுபேரை விடுதலை செய்ய எந்த தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இதையடுத்து, கடந்த 10 நாட்களுக்கு முன்னர் எழுவர் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் தற்போது ஆளுநர் முடிவு செய்தால் விடுதலை செய்யலாம் என்ற நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில், மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தனது தண்டனைக்காலம் முடிவதற்கு முன்னதாகவே, புனே ஏரவாடா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டது குறித்த விபரங்கள் கேட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) மனு ஒன்றை கடந்தாண்டு தாக்கல் செய்திருந்தார்.
அவர் அளித்த மனுவிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, மும்பை குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட நடிகர் சஞ்சய் தத்திற்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவரின் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே, மாநில அரசு அவரை விடுதலை செய்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.