உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் இந்தியாவை ஆட்டம் காண செய்துள்ளது. குறிப்பாக, மத்தியப் பிரதேச மாநிலத்தை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது. நாளுக்குநாள் இதன் பாதிப்பு எண்ணிக்கை அங்கே அதிகரித்துவருகிறது.
இதனிடையே, மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் கோவிட்-19 வைரஸால் ஆயிரத்து 395 பேர் பாதிக்கப்பட்டும், 54 பேர் உயிரிழந்தும் உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில், அதிலும் குறிப்பாக போபாலில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், போபாலில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், போபால் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சாத்வி பிரக்யா, கோவிட்-19 எதிரான மக்கள் நல செயல்பாடுகளில் அக்கறை காட்டுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இதனை மறைமுகமாக சொல்ல "சாத்வி பிரக்யா காணவில்லை" என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டி, போபால் நாடாளுமன்றத் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இது குறித்து பாஜக தரப்பில் கேட்டபோது, “உடல்நலப் பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற சாத்வி பிரக்யா டெல்லியில் இருக்கிறார். டெல்லியில் இருந்தாலும், அவர் தொடர்ந்து இங்குள்ள நிலைமைகள் குறித்து கேட்டறிந்து வருகிறார். தாங்கமுடியாத உடல் நல பிரச்னைகளில் அவர் வாடிவரும்போதும், அவர் தனது கடமையை நிறைவாகவே ஆற்றி வருகிறார். இந்தக் கொடிய வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளை, ஆலோசனைகளை அவர் தனது அலுவலர்களுக்கு வழங்கி வழிகாட்டுகிறார்” என கூறினர்.
"சாத்வி பிரக்யாவை காணவில்லை" - மத்தியப் பிரதேசத்தில் மூளும் போஸ்டர் அரசியல் போர்! இதுவரை ஒட்டப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய சுவரொட்டிக்கு எந்தவொரு அமைப்போ, தனி நபரோ பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இது காங்கிரஸ் தொண்டர்களின் வேலையாகதான் இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க :'நாட்டின் வரலாற்றுப் பிழைகளைத் திருத்திய நரேந்திர மோடி!'