திருவனந்தபுரம்: மண்டல பூஜை மஹோத்சவத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படவுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை 48 நாள்கள் மண்டல பூஜை மஹோத்சவத்திற்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையைத் திறந்து தீபாராதனை நடத்துவார். இதனிடையே இன்றே புதிய மேல்சாந்தியாக ஏ.கே. சுதிர் நம்பூதிரி பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடை திறக்கப்பட்டு நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடுகளை அம்மாநில காவல் துறை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.
அனைத்து அடிப்படை ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுமார் இரண்டாயிரத்து ஆயிரத்து 400 கழிவறைகள், 250 குடிநீர் டாங்குகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அம்மாவட்ட ஆட்சியர் பி.பி. நூஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், நெகிழிப் பைகள், நெகிழி குடிநீர் புட்டிகள் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள கோயில் நிர்வாகம் அதற்கு மாற்று யோசனைகளையும் வழங்கியுள்ளது.
சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது நினைவிருக்கலாம். அதன்படி, சபரிமலைக்கு பெண்கள் இன்று வருவார்கள் என்று கூறப்படுகிறது.