இந்திய-சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பிலும் ஏற்பட்ட மோதலை அடுத்து, இந்தியா-சீனா-ரஷ்யா இடையிலான காணொலி வாயிலாக நேற்று (ஜூன் 23) நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.
இந்தியாவுடன் நட்புறவாகவும் சீனாவைக் கட்டுப்படுத்தும் சக்தியாகவும் இருப்பதால், இந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா மிக முக்கியமான அங்கமாக இருக்கும் என்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்னதாக பாதுகாப்புத் துறை வல்லுநர் க்வாமர் அகா நமது ஈடிவி பாரத்திடம் தெரிவித்துள்ளார்
"இதற்கு முன்னர் டோக்லாம் சர்ச்சைக்கான தீர்வில், ரஷ்யா சிறப்பாகச் செயல்பட்டது. இந்தியாவிடம் மோதல்போக்கை கைவிட்டு, டோக்லாம் பகுதியிலிருந்து திரும்புமாறு சீனாவை ரஷ்யா வலியுறுத்தியது. இந்தியாவுடன் போர்த்திறன் கூட்டுறவில் இருப்பதால் இந்தியா பின்னடைவதை ரஷ்யா விரும்பாது, அதே நேரம் உலகின் சக்திவாய்ந்த ஒரே நாடாக சீனா இருப்பதையும் ரஷ்யா விரும்பவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தெற்காசியாவில் மட்டுமின்றி, இந்திய – பசிபிக் பிராந்தியத்திலும் இந்தியா மிக முக்கிய நாடாக கருதப்படுகிறது, அதனால் சமநிலையான போக்கை இந்தியா கையாள வேண்டும். அமெரிக்காவுடன் நல்லுறவையும், ரஷ்யாவுடன் கூட்டுறவையும் கொண்டிருக்கும் அதே வேளையில் சீனாவுடன் பகைமை பாராட்டுவதை எதிர்காலத்தில் இந்தியா தவிர்க்க வேண்டும்.
தற்போது இந்தியாவுடன் போரில் ஈடுபட்டால் மோசமான பொருளாதார நிலையை அடைய வேண்டியிருக்கும் என்பதால், எல்லையில் மோதல் போக்கை கடைப்பிடித்து, தனது நாட்டில் தேசியவாதத்தை நிலைநாட்ட சீனா முயற்சிக்கும்.
இந்தப் பரபரப்பான சூழலில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு 24ஆம் தேதி நடக்கும் அணிவகுப்பில் கலந்துகொள்ளும் அவர், ரஷ்ய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை ரஷ்யா நம்பிக்கை மிகுந்த நண்பன். அத்துடன் இரு நாடுகளுடனும் தொடர்புகளைக் கொண்டுள்ளது. அதனால் சீன விவகாரத்தில் ரஷ்யா தலையிட்டு பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் என்று, இந்தியா நம்புகிறது.
1975 முதல் இன்றுவரை இருதரப்பிலும் நடந்த மோதல்களில் மோசமானதாக அமைந்தது, ஜூன் 15ஆம் தேதி நடந்த மோதல். இதில் இந்திய தரப்பில் படைப்பிரிவுத் தலைவர் உள்பட 20 பேர் வீரமரணமடைந்தனர். கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்தே, 3,500 கி.மீ. நீள உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் இருதரப்பும் மோதிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"நாம் சீனாவை நம்பினோம், ஆனால் சீனா நம்மை நம்பவைத்து ஏமாற்றிவிட்டது. கட்டுப்பாட்டுடன் இருக்க அவர்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டோம். சீனாவை நம்பிய நமக்கு, முன்பைப் போலவே அந்நாடு துரோகம் செய்துவிட்டது. சீனா வளமான நாடாக இருக்கலாம், ஆனால் உலகளவில் அதற்கு ஆதரவு இல்லை.