கோவிட்-19 தொற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள் அனைவரும் முகக்கவசங்களை அணிந்து கொள்கின்றனர். ஆனால், இதே முகக்கவசங்கள் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்றன என்று சண்டிகரைச் சேர்ந்த இதய சிகிச்சை நிபுணர் யஸ்பால் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய அவர், "அரசு ஊரடங்கு விதிகளை தளர்த்தியவுடன் மக்கள் சிலர் வீடுகளை விட்டு வெளியே வரத்தொடங்கியுள்ளனர். மேலும், சிலர் முகக்கவசங்களை அணிந்துகொண்டு காலையில் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவர்களுக்குப் போதிய ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை. இது உடலில் பல்வேறு தீங்குகளை ஏற்படுத்தும்.
மனிதர்கள் கடுமையான செயல்பாடுகளில் ஈடுபடும்போது, இதயம் ரத்தத்தை வேகமாக உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் செலுத்தும். அப்போது, நமது உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவை ஏற்படும். முகக்கவசங்களை அணிந்துகொண்டு கடினமான வேலைகளில் ஈடுபடும்போது, போதுமான ஆக்ஸிஜன் நமது நுரையீரலுக்கு செல்வது தடுக்கப்படுகிறது.