குஜராத், ஆந்திரா, கர்நாடகாவில் தலா 4, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் தலா 3, ஜார்க்கண்டில் 2, மேகாலயா, மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடங்கள் என மொத்தம் 23 இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன்19) மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது.
இதில் கர்நாடகாவில் பாஜக இரு இடங்களிலும், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி தலா ஒரு இடத்திலும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டன. இதேபோல் ஆந்திராவில் காலியாகவுள்ள நான்கு இடங்களுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நான்கு வேட்பாளர்களும், எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கட்சி சார்பில் ஒரு வேட்பாளரும் நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அன்றைய தினம் மாலை அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள நான்கு இடங்களில் அனைத்தையும் ஆளும் ஜெகன் மோகன் தரப்பு கைப்பற்றியது. சந்திரபாபு நாயுடு வேட்பாளர் தோல்வி அடைந்தார்.
இதில் பரிதாபம் என்னவென்றால், தெலுங்குதேசத்துக்கு 23 எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோதிலும், 17 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே கிடைத்தது. இதையடுத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் துணை முதலமைச்சர் பில்லி சுபாஷ் சந்திர போஸ், அமைச்சர் மொபிதேசி வெங்கட ரமணா, தொழில்துறை அமைச்சர் பரிமல் நத்வானி மற்றும் அயோத்யா ராமி ரெட்டி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் தலா 38 வாக்குகள் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பூரி ரத யாத்திரைக்கு அனுமதி கோரி மனு!