உத்தரப் பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினரான ஸ்ரீ பகவான் சர்மா குடு பண்டிட், ஜூன் 7ஆம் தேதி அவரது முகநூல் பக்கத்திலிருந்து ஒளிபரப்பட்ட நேரலை சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சைக்குரிய காணொலியில் நொய்டாவை நோக்கி செல்லும் கிழக்கு புற அதிவேக நெடுஞ்சாலையில் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் கேக் வெட்டி, ஆடிப்பாடி கொண்டாடியதாக அறிய முடிகிறது.
இது குறித்து புலந்த்ஷாஹர் காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் கூறுகையில், "கோவிட்-19 ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மதிக்காமல், 144 தடை உத்தரவை மீறி பெருங்கூட்டம் கூடுவதற்கு முன்னாள் எம்.எல்.ஏ ஆதரவாக இருந்துள்ளார். அந்த காணொலி சரிபார்க்கப்பட்டது. விதிமீறலில் அவர் ஈடுபட்டது உண்மை தான் என விசாரணையில் உறுதியாகியுள்ளது. இது குறித்து நொய்டாவில் உள்ள தாத்ரி காவல் நிலையத்தில், ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டின் கீழ் ஐபிசியின் தொடர்புடைய பிரிவுகளில் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இது தொடர்பாக நமது ஈ டி.வி பாரத்திடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ ஸ்ரீ பகவான் சர்மா குடு பண்டிட் கூறுகையில் “எனது பிறந்த நாள் ஜூலை மாதம் 10ஆம் தேதி தான். நான் பிறந்தநாளை கொண்டாடவில்லை. என் மாமியார் உயிரிழந்ததால், நொய்டாவில் நடைபெற்ற அவரது இறுதி நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு புலந்த்ஷாஹருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது, அந்த பகுதியில் இளைஞர்களின் குழுவினர் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் என்னைக் கண்டதும், என் காருக்கு அருகில் வந்து, என்னையும் அவ்விழாவில் கலந்துகொள்ள வற்புறுத்தினர்.