கரோனாவின் தாக்கம் உலகின் பல்வேறு பகுதிகளில் குறைந்துவருகிறது. இருப்பினும், ஒரு சில பகுதிகளில் அதன் இரண்டாவது அலை தொடங்கியிருப்பதாக அச்சம் கொள்ளப்படுகிறது. இதற்கிடையே, டெல்லியில் கரோனா எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், முகக்கவசம் அணியாதவர்கள் 2,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "டெல்லியில், பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிந்துள்ளனர். இருப்பினும், சிலர் அணியாமல் உள்ளனர். எனவே, பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் 2,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இதுவரை, அபராதத் தொகை 500 ரூபாயாக இருந்தது. முகக்கவசம் அணியும் பட்சத்தில் மக்களிடையே கரோனா பரவும் அபாயம் குறைவு. மத, சமூக, அரசியல் அமைப்புகள் முகக்கவசங்களை விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்" என்றார்.