2017-ம் ஆண்டின் ஜூலை மாதம் ஒரே நாடு ஒரே வரி விதிப்பு என்கிற வகையில், புதிய சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை மத்திய அரசு முழுவதும் விடுவித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “2020 மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகையில் மாநிலங்களுக்கு 13,806 கோடி ரூபாயை மத்திய அரசு செலுத்தியுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவிற்கு 19 ஆயிரத்து 233 கோடி ரூபாயும், கர்நாடகாவிற்கு 18 ஆயிரத்து 628 கோடி ரூபாயும், குஜராத்திற்கு 14 ஆயிரத்து 801 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு 12 ஆயிரத்து 305 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய ஐந்து மாநிலங்கள் 2019-20 நிதியாண்டில் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையின் கீழ் எந்தத் தொகையையும் பெறவில்லை.
அதாவது, இந்த மாநிலங்களில் வருவாய் வளர்ச்சி 2018-19 நிதியாண்டில் சேகரிக்கப்பட்ட வருவாயை விட 14 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்துள்ளது.