சட்டவிரோத மென்பொருள் மூலம் ரயில்வே டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்று வருவதாக தொடர் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பான விசாரணையில், சிலரை கைதுசெய்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், தற்போது மேலும் ஏழு பேரை கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரயில்வே பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் (டிஜி) அருண் குமார், "டிக்கெட் மோசடி தொடர்பான வழக்கில், சமீபத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் போடார் என்பவருக்கு, வங்கதேச பயங்கரவாத அமைப்பான ஜமாத்-உல்-முஜாகிதீனுடன் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது.
ஏஎன்எம்எஸ், மேக், ஜாகுவார் உள்பட பல்வேறு சட்டவிரோத மென்பொருள்கள் மூலம் ஐஆர்சிடிசி இணையதளத்தை ஹேக் செய்து, அதிலிருந்து தட்கல் டிக்கெட்டுகளை பெற்று கள்ளச்சந்தையில் விற்று வந்துள்ளனர். இந்த ஆப்களை வைத்து ஆண்டிற்கு ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை லாபம் பார்த்துள்ளனர்.
விசாரணையின்போது, முக்கிய குற்றவாளியான போடார், 'ஹெர்மெஸ் ஐ-டிக்கெட் லிமிடட்' என்ற நிறுவனத்தின் 'ஸ்மார்ட் ஷாப்' என்ற செல்போன் செயலி மூலம் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ராஜேஷ் யாதவ் என்பவருக்குச் சொந்தமான சிஃபா எண்டர்பிரைஸ், வைபை சொல்யூஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஹெர்மெஸ் நிறுவனம், ஒரு கோடி ரூபாய் அளவிற்கு பரிவர்த்தனை மேற்கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.