ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதன் முறையாக ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால், அம்மாநில மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு வரலாறு காணாத தோல்வியைத் தழுவி எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளார்.
'ஆந்திராவுக்கு நல்ல காலம் பிறந்திருச்சு' - நடிகை ரோஜா
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ள நடிகை ரோஜா, ஆந்திர மக்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், ஜெகன் மோகன் ரெட்டி வரும் 30ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் நகரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா, இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து நகரி தொகுதியில் உள்ள தேசம்மா தாயார் கோயிலுக்கு சென்று அம்மனை ரோஜா தரிசித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரோஜா, "கடவுளின் ஆசியாலும், மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையாலும் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளேன். வெற்றிக்காக உழைத்த கட்சித் தொண்டர்களுக்கும் எனக்கு ஆதரவளித்த நகரி தொகுதி மக்களுக்கும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். ஒய்எஸ்ஆர் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நல்லாட்சியைத் தருவார். ஆந்திர மாநிலத்திற்கு இப்பொழுதுதான் நல்ல காலம் பிறந்திருக்கு. மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்" என்றார்.