மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையின் கோபர் கைர்னே பகுதியில் அமைந்துள்ளசரஸ்வத் கூட்டுறவு வங்கியினுள் அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் நேற்று (ஜூலை.16) நுழைந்துள்ளனர்.
பின்னர், அங்கிருந்த வங்கி ஊழியரின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் வைத்திருக்கும் லாக்கரைத் திறக்க சொல்லி, அதிலிருந்த நான்கரை லட்சம் ரூபாயை கொள்ளையடுத்து சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் நடைபெறும்போது, வங்கியில் ஏழு ஊழியர்கள் மட்டுமே இருந்துள்ளனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து, வங்கி ஊழியர்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
பட்டப்பகலில் கத்தி முனையில் கொள்ளை நடைபெற்ற வங்கி. தகவலறிந்து வந்த காவல் துறையினர், வங்கியின் சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில்,"அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கக்கூடும்" எனத் தெரியவந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் வெளியில் வரும்போது முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் இருவரும் முகக்கவசம், கையுறைகள் அணிந்து வந்ததது, வங்கியிலுள்ள ஊழியர்கள், பொதுமக்கள் யாரும் அவர்கள் இருவரும் கொள்ளையர்கள் என்று சந்தேகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...வடபழனி தனியார் மருத்துவமனையில் 10 சவரன் தாலி திருட்டு