தேசிய கல்விக் கொள்கை 2020 தொடர்பான குடியரசுத் தலைவர், ஆளுநர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்காலத்திற்கு தயாராக உள்ளது என்றும் 21ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் சமூக, பொருளாதார வாழ்க்கைக்கு இது ஒரு புதிய திசையை வழங்கும் என்றும் கூறினார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "பள்ளிக் கல்வியாக இருந்தாலும் சரி, உயர் கல்வியாக இருந்தாலும் சரி, புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கான வரைபடத்தை அரசு தயாரித்துள்ளது.
இதைப் பல்வேறு கட்டங்களாக சிறப்பான முறையில் செயல்படுத்த கல்வி அமைச்சகம் 300-க்கும் மேற்பட்ட முக்கியப் புள்ளிகளை உருவாக்கியுள்ளது. இது அடுத்த ஒரு வாரத்திற்குள் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும்.
இந்த 300 புள்ளிகள் குறித்து கல்வி அமைச்சகம் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கும், அதன் பின்னர் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வழிகாட்டுதல் தயாரிக்கப்படும்.