கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் இதுவரை 496 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்த்தொற்று பரவலைத் தடுக்க கேரள அரசு துரிதமாக செயல்பட்டு வருவதுடன், பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது. தற்போது, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அம்மாநில மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கின்றனர்.
இந்த கோடை காலத்தில் மக்களுக்கு பிடித்தமான இடமாக இருக்கும் வயநாடு கோவிட்-19 வைரஸ் பூட்டுதல் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது. ஊரடங்கால் மக்களின் சுதந்திரம் பறிபோனாலும், விலங்குகள் சுதந்திரமாய், தமக்குப் பிடித்த இடங்களிதில் சுதந்திரமாக சுற்றித் திரியத் தொடங்கியுள்ளன. மனிதர்களை கண்டு பயப்பட வேண்டியதில்லை. தனக்கு பிடித்த இடத்திற்கு உணவுத் தேடி சாலையின் வழியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து திரிகின்றன.
தற்போது, வனப்பகுதிகளில் சுற்றித் திரியும் விலங்குகள், பறவைகள் சாலையோரத்தில் வேகமாய் செல்லும் வாகனங்களின் சக்கரங்களுக்குள் சிக்கி இறையாகும் சம்பவங்கள் குறைந்துவிட்டன. பச்சை பசேல் என காட்சியளிக்கும் பசுமையான புல்வெளிகளில் காட்டுப்பன்றிகள், யானைகள், மான்கள், மயில்கள் மற்றும் இன்னும் பல வனவிலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதை காண்கையில் மனம் அலாதி இன்பம் பெறுகிறது. வயநாட்டில் வனப்பகுதிக்குள் வனவிலங்குகளின் இருப்பு அதிகரித்துள்ளது.