அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அகமதாபாத்திற்கும், டெல்லிக்கும் வருகை தரவுள்ளனர். இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிப்ரவரி 24ஆம் தேதி வருகை தரும் டொனால்ட் ட்ரம்ப் அகமதாபாத்தில் உள்ள 1.10 லட்சம் இருக்கைகள் கொண்ட மோதேரா மைதானத்தில் நடைபெறும் 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அதன் பின் மாலை 4.30 மணிக்கு ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலுக்கு, தனது குடும்பத்தினருடன் சென்று பார்வையிடவுள்ளார். இதில், டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவான்கா ட்ரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் தாஜ் மஹாலை அரை மணிநேரம் பார்வையிடுகின்றனர். அமெரிக்க அதிபர் தாஜ் மஹாலை பார்வையிட வருவதால், 24ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் பொதுமக்களுக்காக மூடப்படும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை அறிவித்துள்ளது.
இதனையொட்டி, டெல்லி கெரியா விமான நிலையத்திலிருந்து தாஜ் மஹால் செல்லும் பாதையில் உள்ள சுவர்கள் முழுதும் அமெரிக்கக் கொடியின் படங்களும், அமெரிக்க அதிபரை வரவேற்கும் விதமாக 'நமஸ்தே ட்ரம்ப்' என்ற வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன. சாலையோரங்களில் பல விளம்பர பலகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் உள்ளன.