ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிப்போர் குறைந்தபட்சம் 250 ரூபாய் அபராதத் தொகையாக செலுத்த வேண்டும். ஒருவேளை அபராதத் தொகை செலுத்த மறுப்பு தெரிவித்தால், அந்நபர் ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் (ஆர்.பி.எஃப்) ஒப்படைக்கப்பட்டு, ரயில்வே சட்டத்தின் பிரிவு 137இன் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர். நீதிபதி அவருக்கு ரூ.1,000 வரை அபராதம் விதிக்கலாம். அப்போதும், முரண்டு பிடித்தால் ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில்,மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்வலர் சந்திர சேகர் கவுர், டிக்கெட் இல்லாமல் பயணித்தோரிடமிருந்து பெறப்பட்ட அபராதத் தொகையை குறித்து அறிய ஆர்டிஐ ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அவருக்கு கிடைத்தப் பதிலில், 2016-17ஆம் ஆண்டில் டிக்கெட் இல்லாத பயணிகளிடமிருந்து, அபராதமாக ரயில்வே துறைக்கு ரூ.405.30 கோடி வருவாய் கிடைத்தது. பின்னர், 2017-18ஆம் ஆண்டில், இது ரூ.441.62 கோடி ரூபாயாக அதிகரித்தது. மேலும், 2018-19ஆம் ஆண்டில் மட்டுமே ரூ.530.06 கோடி வசூலைப் பெற்றிருந்தது. அதன்படி, 2019-20ஆம் ஆண்டில், டிக்கெட் இல்லாமல் பயணித்த 1.10 கோடி பயணிகளிடமிருந்து அபராதத் தொகையாக ரூ.561.73 கோடி பெற்றுள்ளனர்.