தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊரடங்கால் பாரம்பரிய முறைக்குத் திரும்பிய ஆழ்கடல் ராசாக்கள்! - தூத்தூர் ஆழ்கடல் மீனவர்கள் பாரம்பரிய முறைக்கு மாறினர்

கன்னியாகுமரி : ஊரடங்கு காரணமாக முடங்கிப் போயுள்ள தூத்தூர் ஆழ்கடல் மீனவர்கள், தற்போது பாரம்பரியமான முறையில் கரையோரம் மீன்பிடித்துவருகின்றனர் .

riders of the deep sea
riders of the deep sea

By

Published : May 15, 2020, 12:30 AM IST

Updated : May 15, 2020, 11:47 AM IST

கரோனா பெருந்தொற்று பரவல் கைமீறிச் செல்வதைத் தடுக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதிமுதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து நான்காவது முறையாக நீட்டிக்கப்படவுள்ள இந்த ஊரடங்கு காரணமாக பெரும்பாலான துறைகள் முடங்கிப்போயுள்ளன.

இதனிடையே, ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கப் போன தூத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த மீனவர்கள் ஊரடங்கு அமலில் உள்ளது தெரியாமல் மயானமாக காட்சியளித்த துறைமுகங்களுக்குச் சமீபத்தில் வந்தடைந்தனர்.

இதையடுத்து, கடின உழைப்பில் தாங்கள் பிடித்த வகைவகையான மீன்களை அடிமட்ட விலைக்கு விற்றுத் தீர்த்தனராம். இதைத்தொடர்ந்து, நிலைமையைச் சமாளிக்க தற்போது பாரம்பரிய முறையில் கரையோரமாக வலைவிரித்து மீன்பிடித்துவருகின்றனர்.

இது குறித்து ஷார்னில் என்ற மீனவர் கூறுகையில், "எனக்குச் சொந்தமான மீன்பிடி படகுகள் தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்திலும், கேரளாவில் உள்ள வேறு சில துறைமுகங்களிலும் முடங்கியுள்ளன. ஊரடங்கினால் எங்கள் வாழ்வாதாரம் நசிந்து போயுள்ளது.

இதனிடையே, கரையோரமாக வலைவரித்து மீன்பிடிக்கும் எங்கள் பாரம்பரிய முறைக்கு மாறிவிட்டோம். ஆழ்கடல் மீன்பிடிப்பில் பழகிப்போன நாங்கள் வீட்டில் சும்மா இருப்பதற்கு ஏன் கரையோரமாக மீன்பிடிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் இதனைச் செய்துவருகிறோம்" என்றார்.

ஆழ்கடல் மீனவர்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஜோஸ் பிப்லின் கூறுகையில், "ஊரடங்கு காலத்தில் நாட்டுப் படகுகளை மட்டுமே கடலுக்குச் செல்ல அரசு அனுமதிக்கிறது. அதுவும் திங்கள், புதன், வெள்ளி, சனி என நான்கு நாள்கள் மட்டுமே மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மீன்பிடித்து வர நான்கு மணி நேரமே வழங்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், பிடித்துவரும் மீன்களை அருகில் உள்ள கிராமங்களுக்கு மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும் என உத்தரவு போடப்பட்டுள்ளது. வெளியில் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.

முன்னர் இருந்தது போன்று தற்போது நாட்டுப் படகுகள் அவ்வளவாகப் பயன்பாட்டில் இல்லை. எனவேதான் நாங்கள் இங்குள்ள மீனவர்களின் பாரம்பரியமான கரையோர மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: ‘பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு அரசின் புதிய வழிகாட்டுதல்கள்’

Last Updated : May 15, 2020, 11:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details