மலைக்க வைக்கும் கலையம்சம் கொண்ட பிரமிக்கவைக்கும் தனிச்சிறப்புமிக்க பேராலயம், மசூதியாக்கப்பட்டு பின்னர் அருங்காட்சியகமானது. தற்போது மீண்டும் மசூதியாக மாற்றப்பட்டு, அங்கு தொழுகைகள் நடைபெறவுள்ளன! எதிர்வரும் ஜூலை 24 (வெள்ளிக்கிழமை) முதல் ‘ஹஃகியா சோஃபியா”-வின் கதவுகள் 86 ஆண்டுகளுக்குப் பின் தொழுகைக்காகத் திறக்கப்படுகின்றன. துருக்கி அதிபர் ரெசிப் தய்யிப் எர்டொகான் எடுத்துள்ள அதிர்ச்சியளிக்கும் இந்த முடிவு, நவீன துருக்கியின் அடித்தளத்தையே தகர்த்துவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பின்தங்கிய நாடாக இருந்த துருக்கியைப் பழமை வாதத்தில் இருந்து மீட்டு, நவீன தேசமாக நிர்மானித்த கெமால் அட்டாட்டுர்க்கின் முற்போக்கு கொள்கைகளுக்கு முடிவு கட்டுவதாவும் பார்க்கப்படுகிறது. இது கிறிஸ்தவ – இஸ்லாமிய நல்லுறவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன், வரலாற்றை விருப்பத்திற்கேற்ப மாற்ற முயற்சிப்பதில் உள்ள ஆபத்தும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதன் காரணமாக, துருக்கியின் இந்த முடிவு சர்வதேச அளவில் அதிர்ச்சியையும் எதிர்ப்பலைகளையும் உருவாக்கியுள்ளது. பல்வெறு நாடுகள் - துருக்கியின் அருகில் உள்ள கிரேக்கக் குடியரசும், தொலைவில் உள்ள அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியனும் ரஷ்யாவும் - இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. ’தாங்கவொண்ணா வலியை’-த் தருவதாக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவர் போப்பாண்டவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்துக்கு குந்தகம் விளைவிக்கும், என்று எச்சரித்துள்ள யுனெஸ்கோ அமைப்பு, ஹஃகியா சோஃபியா-வின் கலாச்சார உயர்மதிப்புக்கும் வரலாற்று முக்கியத்துவத்திற்கும் பாதிப்பு ஏற்படும் செயல்பாடுகளைக் கைவிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும், பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்து பறிபோகலாம் என்றும் தனது எதிர்ப்பை யுனெஸ்கோ பதிவு செய்துள்ளது.
’ஹகியா சோஃபியா’ ஏன், எதனால் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது? ஹஃகியா சோஃபியா என்றால் ‘தூய ஞானம்’ என்று அர்த்தம். தொன்மையான கான்ஸ்டான்டினோபிள் நகரின் – இன்றைய இஸ்தான்புல் - வரலாற்றுப் பொக்கிஷம், கிழக்கு ரோம சாம்ரஜ்யத்தின் – பைசாண்டியன் - கட்டடக்கலையின் உச்சம். ரோமப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் ஆட்சியில் கி.பி 6-ஆம் நூற்றாண்டில் இந்த பேராலயம் கட்டப்பட்டது.
கெமால் அட்டாடுர்க் ஆட்சியில், ஹஃகியா சோஃபியா-வை அருங்காட்சியமாக மாற்ற எடுக்கப்பட்ட 1934-ஆம் ஆண்டு அமச்சரவை முடிவை, தற்போதைய துருக்கியின் உயர்மட்ட நிர்வாக தீர்ப்பாயம் (Council of State) ஏகமனதாக இரத்துசெய்த நிலையில், அதிபர் எர்டொகான், ஜூலை10-ஆம் தேதி அதனை மீண்டும் மசூதியாக மாற்றும் சட்டத்தில் கையெழுத்திட்டு, இஸ்லாமியர் வழிபாடு நடத்த அது திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்குமான இணைப்புப் பாலமான இஸ்தான்புல் நகரின் சிறப்புமிக்க சின்னமாக விளங்கும் ஹஃகியா சோஃபியா, மேற்கத்திய மற்றும் கீழைத்தேய கலாச்சாரக் கலவையின் எடுத்துக்காட்டு. கீழை ரோம அரசாட்சியில் பேராலயமாகக் கட்டப்பட்டு 916 ஆண்டுகள் வழிபாடு நடைபெற்றது. பின்னர். ஒட்டாமன் பேரரசின்கீழ் கான்ஸ்டான்டினோபிள் வந்த போது கிபி 1453 ல் மசூதியாக மாற்றப்பட்டது. ஆனால், நவீன துருக்கியை குடியரசாக நிர்மானித்த கெமால் அட்டாட்டுர்க் 1934-ல் அதனை ஒரு அருங்காட்சியமாக மாற்றினார். மதச்சார்பற்ற துருக்கிய குடியரசின் போற்றப்படும் அடையாளமாக அது விளங்கியது குறிப்பிடத்தக்கது.
பல தரப்பிலும் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தபோதும் இந்தியா இந்த பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் ஒதுங்கியே இருக்கிறது. வெள்ளை மாளிகை முதல் கிரெம்ளின் வரையிலும், ஐரோப்பிய ஒன்றியமும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ள நிலையில், இந்தியா அமைதி காத்து வருகிறது. உலக இஸ்லாமியத் தலைமையைக் குறிவைத்து, சவுதி அரேபியா மற்றும் ஈரானுக்குப் போட்டியாக, எர்டொகான் தன்னை முன்னிலைப் படுத்தி வருகிறார்.
இதற்காக இந்தியாவை சீண்டுவது வாடிக்கையாக இருக்கிறது. குறிப்பாக, கடந்த ஓராண்டாக பன்னாட்டு அரங்குகளில் இந்தியா அவரது கடுமையான விமர்சனத்தை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு செல்லாததாக ஆக்கிய போதும், அண்மையில் டெல்லி கலவரத்தில் நிகழ்ந்த ‘முஸ்லீம் படுகொலைகள்’ ஆகியவை குறித்து எர்டொகான் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
எர்டொகானின் இந்திய எதிர்ப்பு காரணமாக, ஹஃகியா சோஃபியா விவகாரத்தில் இந்தியாவும் பிற நாடுகளுடன் இணைந்து தனது எதிர்ப்பையும் கண்டணத்தையும் பதிவு செய்யும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. “அதிக எண்ணிக்கையில் மக்கள் தொகை உள்ளாதாலேயே எந்த ஒரு நாடும் தன்னை வலிமையானது எனக் கருதலாகாது, யதார்த்தம் அவ்வாறு இல்லை,” என்று இந்தியாவைக் குறிப்பிட்டு பேசிய எர்டொகான், பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாட விற்பனையை அதிகப்படுத்தியதுடன், இந்தியாவை விமர்சிப்பதில் மலேசியாவுடன் இணைந்துகொண்டார்.
அந்த சமயத்தில் புது தில்லி, எர்டொகானை காட்டமாக விமர்சித்தது. “அவரது கருத்துக்கள் சிறிதும் வரலாற்றுப் புரிதலற்ற, அயலுறவு நடைமுறை மற்றும் அனுகுமுறை குறித்த தெளிவற்றவை. கடந்த கால நிகழ்வுகளைத் திரித்து, தற்போதைய சூழலைக் குறுகிய கண்ணோட்டத்தில் அனுகுவதாக உள்ளது,” என்று இந்திய அயலுறவு அமைச்சகம் அப்போது தெரிவித்தது.