இந்திய - சீன எல்லைப்பகுதியான லடாக்கில் இரு ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்துள்ளனர். சீனாவின் அத்துமீறல் நடவடிக்கை காரணமாக இந்தியாவில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
பலர் சீன கொடிகள், அதிபரின் புகைப்படங்கள், கொடும்பாவிகளை எரித்தும், சீன நிறுவனங்கள் செயல்படும் வளாகங்களை முற்றுகையிட்டும் தங்கள் எதிர்ப்பை தொடர்ச்சியாகக் காட்டிவருகின்றனர். மேலும் பலர் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து சீனப் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சரும் ஆர்.பி.ஐ கட்சித் தலைவருமான ராம்தாஸ் அத்வாலேவின் புதிய கோரிக்கை அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சீனா இதுபோன்ற அத்துமீறலை மேற்கொள்ளும் நிலையில் இனி இந்திய உணவகங்களில் சைனீஸ் உணவு வகைகள் எதுவும் விற்பனை செய்யக்கூடாது. சைனீஸ் உணவுகளை விற்கும் உணவகங்களை மாநில அரசு சீல் வைக்க வேண்டும். மக்கள் அனைவரும் இனி சைனீஸ் உணவுகளை புறக்கணிக்க வேண்டும் என பகீர் கோரிக்கையை வைத்துள்ளார்.