கல்வான் மோதலை தொடர்ந்து இந்திய, சீன நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவிவரும் நிலையில், நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய மோடி, எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் தக்க பதிலடி அளித்தார்கள் என பெருமிதம் தெரிவித்தார்.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் துணிச்சலை வெளிப்படுத்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பேசிய அவர், "இந்திய இறையாண்மை மீது வைக்கப்படும் மரியாதை எல்லாவற்றிற்கும் மேலானது. அதனை காக்கும் விதமாக லடாக்கில் செயல்பட்ட நம் ராணுவ வீரர்களை உலகமே பார்த்தது.
எல்லைப் பகுதிகளில் நாட்டின் இறையாண்மை மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நம் ராணுவ வீரர்கள் தக்க பதிலடி அளித்தார்கள். பாதுகாப்பு, வளர்ச்சி, நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் நம் அண்டை நாடுகளுடனான உறவு மேம்படுத்தப்பட்டுவருகிறது.