உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 63 குழந்தைகள் 2017ஆம் ஆண்டு உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்னர், விசாரணையில் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கும் நிறுவனத்திற்கு முன்னதாக அளிக்கப்பட வேண்டிய பணம் வழங்காததால் தேவையான நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கவில்லை என தெரிய வந்தது.
கோரக்பூர் குழந்தைகள் பலியான விவகாரம்; கோரிக்கை விடுத்த கபீல் கான்! - கோரக்பூர் குழந்தைகள் பலியான விவகாரம்
லக்னோ: கோரக்பூர் குழந்தைகள் பலியான விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கையை திரும்பப்பெற மருத்துவர் கபீல் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
திடீர் திருப்பமாக, தன் சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி குழந்தைகளின் பலியை தடுத்த மருத்துவர் கபீல் கான் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஒன்பது மாத சிறைக்கு பிறகு கபீல் கானுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. குழந்தைகள் உயிரிழப்பு குறித்து விசாரித்துவந்த விசாரணை ஆணையம் தற்போது அறிக்கையை அளித்துள்ளது. அதில், கபீல் கான் குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய மருத்துவர் கபீல் கான், "இந்த அறிக்கையை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் உத்தரப் பிரதேச அரசின் உரிமை. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கையை திரும்பப்பெற்றுக் கொள்ள உத்தரப் பிரதேச அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன். இந்த வழக்கின் விசாரணை வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட வேண்டும் அல்லது சிபிஐ விசாரிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் உண்மை குற்றவாளிகளை அடையாளம் காண முடியும். அவர்கள் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என்றார்.