டிஆர்பி முறைகேடு ஊடகத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. டிஆர்பியை அளவிடும் ஹன்சா ஆராய்ச்சி நிறுவனத்தின் அலுவலரான நிதின் தியோகர், டிஆர்பியில் முறைகேடு நடைபெறுவதாக மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மும்பை காவல் துறையினர், டிஆர்பி முறைகேடு தொடர்பாக இதுவரை 13 பேரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, விளம்பர வருவாயை பெருக்கிக்கொள்ளும் நோக்கில் டிஆர்பியை அதிகரித்து முறைகேட்டில் ஈடுபடுவதாக ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அலுவலர் விகாஷ் காஞ்சந்தனியை நேற்று (டிசம்பர் 13) மும்பை காவல் துறை கைதுசெய்தது.