புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மற்றும் பேரிடர் காலத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் என்.ஆர். காங்கிரஸ் சிரம் தாழ்ந்து வணங்கி வாழ்த்தி பாராட்டுகிறது.
இந்த அரசானது தற்போதைய சூழலில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய சிறப்பு நிதிகள் வழங்க வேண்டும். மருத்துவமனையில் உயிர் காக்கும் சுவாசக் கருவிகள், வென்ட்டிலேட்டர்கள் குறைந்த கையிருப்பு உள்ளது என்று மருத்துவக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது போதுமா என்பதை உணர்ந்து அரசு உபகரணங்கள் மற்றும் வென்ட்டிலேட்டர்களை துரிதமாக வாங்கவேண்டும். மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பாதுகாப்பான கவச உறைகள் இல்லை.
கரோனா வைரஸை தடுக்கும் ஜி-95 முகக்கவசங்கள், கவச உடைகளை எந்தவிதமான நிபந்தனையின்றி உடனடியாக அரசு வாங்க வேண்டும். அதுமட்டுமல்லாது புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கரோனா சிறப்பு வார்டுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் போதுமான வசதிகள் உள்ளனவா? என்று ஆய்வு செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும். இயற்கை பேரிடர் காலம் ஏற்படும்போதும், உயிர் காக்கும் கருவி வாங்கும்போதும் அரசு பழைய நடைமுறையை பின்பற்றினால், காலதாமதம் ஆகும். இது ஆட்சியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும், அரசுப் பதவியில் உள்ளவர்களுக்கும் மிகவும் நன்றாக தெரியும்.